இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் மட்டுமே தெற்காசியாவில் நிரந்தர அமைதி ஏற்படுவது சாத்தியம் என்று பாகிஸ்தானின் முன்னாள் அயலுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீண்ட காலமாகத் தொடரும் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பரிந்துரைத்த 4 அம்சக் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.
"உலகமயமாக்கல் வளர்ந்துவரும் சூழலில் அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தினால் மட்டுமே வர்த்தகத்தைப் பெருக்குவதுடன் அமைதியையும் உறுதிப்படுத்த முடியும்.
எனது பதவி காலத்தில் சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்லுறவை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஈரான்-பாகிஸ்தான் -இந்தியா எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பேச்சுகளும் வேகமாக நடந்தன" என்றார் கசூரி.