துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காருடன் மாயமானதாகக் கருதப்பட்ட இந்தியர் ஒருவர் பிணமாகச் சார்ஜா கடலில் கிடந்தார்.
கேரளத்தைச் சேர்ந்த சுதாகர் குரூப் துபாயில் உள்ள யுனைட்டட் அராப் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தன்னுடைய நண்பரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சார்ஜாவில் உள்ள அல் மம்ஷார் கோர்னிச் பாலத்தைக் கடந்தபோது எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக தன்னுடைய காரை வேகமாகத் திருப்பியுள்ளார். இதில் சுதாகரின் கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்தது.
இதையடுத்து சுதாகரைக் காணாத அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 4 நாட்கள் நடந்த தேடுதலின் இறுதியில் இன்று அதிகாலை சுதாகரின் கார் கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.