நேபாளத்தில் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான அரசில் மீண்டும் பங்கேற்பது என்று மாவோயிஸ்டுகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான 22 அம்ச ஒப்பந்தம் நேற்றிரவு கையெழுத்தானது.
இதன்படி தற்போதுள்ள இடைக்கால அரசு நேபாளத்தை குடியரசு நாடாக அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றம் இதை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து கடந்த 3 மாதமாக நேபாளத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது. மேலும், மாவோயிஸ்டுகள் கைப்பற்றியுள்ள நிலம், பணம், சொத்துகள் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நேபாளத்தில் நடந்த வன்முறையின் போது காணாமல் போன மாவோயிஸ்டுகளை கண்டுபிடிக்க ஆணையம் ஒன்றை அமைக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக நேபாள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திமலேந்திர நிதி தெரிவித்துள்ளார்.