இந்தியாவுடன் பாதுகாப்பு, ராணுவம் தொடர்பாக புதிய வலுவான மிக முக்கியமான உறவுகளை வளர்ப்பதற்கு அமெரிக்கா மிகவும் விரும்புகிறது என்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஆண்டிறுதி செய்தியாளர் சந்திப்பு அறிக்கையில், சீனாவின் ராணுவ வலிமை அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தனது ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள ரைஸ், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளியாக ஜனநாயகமான பாகிஸ்தான் அரசு செயல்படும் நேரம் வரப்போகிறது என்றும் கூறியுள்ளார்.
மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்களை வற்புறுத்துமாறு சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என்றும், இதே கோரிக்கைக்காக ஐ.நா. விலும் பேசுவோம் என்றும் ரைஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.