காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்ட நடவடிக்கையின் எதிரொலியாக, பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு காமன்வெல்த் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அயலுறவு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், "அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது தொடர்பான ௦௦௦௦௦௦௦௦௦௦௦உண்மை நிலைகளை விளக்குவதற்கு சில வாரங்கள் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த காமன்வெல்த் கூட்டமைப்பு, அவசரப்பட்டு வெறுக்கத்தக்க முடிவை எடுத்து விட்டது" என்றனர்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. இதனால் காமன்வெல்த் கூட்டமைப்பின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடக்கவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று காமன்வெல்த் தரப்பில் கடந்த வாரம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதில் பாகிஸ்தான் அதிக ஆர்வம் காட்டவில்லை.
காமன்வெல்த் கூட்டமைப்பின் முடிவு தங்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள புதிய அரசுதான் இனிமேல் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.