அமெரிக்காவின் ஆதிக்கம் நிறைந்த ஐ.நா. பாதுகாப்பு அவையிலும், ஜி-8 நாடுகள் குழுவிலும் இந்தியா இடம்பெற வேண்டும் என்று பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள பிரான்ஸ் அயலுறவு அமைச்சர் பெர்னார்டு கெளச்னெர் புது டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.
பிரான்சின் மின்சக்தி தேவையில் 90 விழுக்காட்டை அணுசக்தி பூர்த்தி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், அணுசக்தியை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும், அதற்கு சர்வதேச அணுசக்தி முகமையின் அனுமதி அவசியம் என்றும் கூறினார்.
பிரான்ஸ்- சீனா நல்லுறவுடன் பிரான்ஸ்- இந்தியா நல்லுறவை ஒப்பிடுவதற்கு மறுத்த பெர்னார்டு கெளச்னெர், உலகில் அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது பணக்கார நாடு சீனா என்றாலும் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என்று கூறினார்.
"இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில் ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றுக்கும் இந்தியா மிகவும் முக்கியம்" என்றும் கெளச்னெர் கூறினார்.
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி அடுத்த மாதம் இந்தியாவிற்கு வரும்போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று குறிப்பிட்ட கெளச்னெர், பிரான்சுக்குப் படிக்கவரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
முன்னதாக, பெர்னார்டு கெளச்னெர் இன்று காலை பிதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது மன்மோகன் சிங் ஒரு திறமைவாய்ந்த மனிதர் என்று கூறினார்.
நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்தார்.