இந்தியாவுடன் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகள், சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுத்து வரும் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த வழியில் போராடும் முயற்சிக்கு முக்கியம் என்று சீனா கூறியுள்ளது.
சீனாவில் குன்மிங் நகரில் "கையோடு கை 2007" என்ற தலைப்புடன் நடக்கின்ற இந்திய- சீன ராணுவத்தினரின் கூட்டுப் பயிற்சிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய சீன ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷியாங் ஜூவோமிங் இவ்வாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இரு நாடுகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு சீனா எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா சார்பில் பேசிய ராணுவ தளபதி கலோனல் ஜெ.எஸ்.புத்வார், இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் புதுப்பிக்கப்படுவதுடன், ஆசியாவில் இருபெரும் சக்திகளாக இருநாடுகளும் உருப்பெறுவதற்கு இப்பயிற்சிகள் உதவும் என்றார்.
இதையடுத்து, சீன ராணுவத்தினர் தங்களிடம் உள்ள எல்லா வகையான நவீன ஆயுதங்களையும் குன்மிங் ராணுவ அகாடமியில் காட்சிக்கு வைத்தனர்.
இன்று மாலையில் இந்திய ராணுவத்தினர் பயிற்சி எடுக்கின்றனர். இதைத் தொடர்ந்து நமது ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.