ஜெனீவாவில் நடந்துவரும் மனித உரிமை மாநாட்டில், பாகிஸ்தானில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலர் இக்பால் ஹைடர், பாகிஸ்தானில் அரசியல் அமைப்புச் சட்டம் அதிரடித் திருத்தங்களுக்கு உட்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகள், பாகிஸ்தான் குறித்து எடுத்துவைத்த கருத்துகளை அவர் ஒப்புக் கொண்டார்.
"பாகிஸ்தானில் அவசர நிலை அமலில் இருந்த போது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தல், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு உதவும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதிபர் பர்வேஷ் முஷாரஃப் விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அவரின் சர்வாதிகாரம் தொடரும் என்றே தோன்றுகிறது" என்று அவர் குற்றம்சாற்றினார்.
மேலும், அவசர நிலை காலத்தில் அமலில் இருந்த அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த உத்தரவைத் திரும்பப் பெற்று அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் ஹைடர் வலியுறுத்தினார்.