Publish Date: Tue, 18 Dec 2007 (19:00 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
மலேசியாவில் இந்தியர்களுக்கு சமஉரிமை கேட்டு நடத்தப்பட்ட பேரணியின் எதிரொலியாக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஹின்ட்ராஃப் நிர்வாகிகள் 5 பேரையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசியப் பிரிவு துணை இயக்குநர் எலைன் பியர்ஸன், ஹின்ட்ராஃப் அமைப்பின் நிர்வாகிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 5 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என நம்புவதாக பியர்ஸன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் நடத்தப்பட்ட பேரணியைத் தூண்டி விட்டதாக, ஹின்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த உதயகுமார், மனோகரன், ஞானபத்ரி ராவ், கெங்காதரன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 5 பேர் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்க முடியும். இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.