Publish Date: Tue, 18 Dec 2007 (18:55 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
ராணுவத்தின் மீதான தாக்குதல்கள் தொடருமானால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியில் ஒடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு அவர்களை ஒடுக்கினால்தான் அமைதி உருவாகும் என்றும் கூறினார்.
மேலும், விடுதலைப் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு சிறிலங்காவில் தடை விதிப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று ராஜபக்ச எச்சரித்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அப்போதைய சிறிலங்கா அரசு, போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும், அமைதிப் பேச்சுகளை தொடங்குவதற்கும் ஏதுவாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.