பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிந்து புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்கியதும் அதிபர் முஷாரஃப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முன்னாள் பிரதமர் பெனாசிர் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் கண்காணிப்புப் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லத்தீப் கோஷா கூறுகையில், "அதிபர் முஷாரஃப் தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சட்ட மீறல்களை செய்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் நடக்கவில்லை.
பொதுத் தேர்தல் முடிந்தவுடன் எதிர்க்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அப்போது புதிய நாடாளுமன்றத்தில் முஷாரஃப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அதேபோல, எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றால் ஜனநாயகத்துக்கு எதிரான அனைத்து சட்டத் திருத்தங்களும் நீக்கப்படும். முஷாரஃப்பின் ராணுவச் சட்டங்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி எப்போதும் எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.