மலேசியாவில் கடந்த மாதம் ஹின்ட்ராஃப் அமைப்பு நடத்திய பேரணியின் போது காவலர் ஒருவரைக் கொல்ல முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவழியினர் 31 பேரின் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கை அந்நாட்டு அரசு கைவிட்டுள்ளது.
கிலாங் அமர்வு நீதிமன்றத்தில் இந்திய வம்சாவழியினர் 31 பேரும் இன்று விசாரணைக்காக ஆஜரானபோது, அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்கை திரும்பப்பெறுவதாக மலேசிய அரசு தலைமை வழக்கறிஞர் கனி பட்டேல் தெரிவித்தார்.
கைதாகியுள்ள 31 பேரில் கல்லூரி மாணவர்களான 5 பேரின் மீது தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளும் கைவிடுவதாகவும், மீதமுள்ள 26 பேரின் மீது கொலை முயற்சி வழக்கு மட்டும் கைவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் 5 பேரை நீதிமன்றம் உடனடியாக விடுவித்தது.
மீதமுள்ள 26 பேரின் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதால் அவர்களுக்கு பிணைய விடுதலை வழங்கியதுடன், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.