பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படும் தேர்தல் என்பதால், அதை மிகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளது.
"எதிர்க்கட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பாகிஸ்தானில் முழுமையான ஜனநாயகம் திரும்பியுள்ளதாகக் கருத முடியும்" என்று வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முடிவுகளில் அதிபர் முஷாரஃப் ஒருதலையாகச் செயல்படுகிறார் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளும், தனது கட்சியை துண்டாக்க உளவுத்துறை சதி செய்கிறது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் புட்டோவும் குற்றம்சாற்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் வலியுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.