பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் முறைகேடுகள் இல்லாமல் வெளிப்படையாக நடக்கும் என்றால் அதிபர் முஷாரஃப்புடன் கூட்டணி வைக்க தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கூறியுள்ளார் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் அவசர நிலை ரத்து செய்யப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பெனாசிர், "ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகியது உள்ளிட்ட முஷாரஃப்பின் சில நடவடிக்கைகள், நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் எனக்கும் வியப்பைத் தந்துள்ளன" என்று கூறியுள்ளார்.
முஷாரஃப்புடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டதற்கு, "இப்போதுள்ள சூழ்நிலையில் பொதுத் தேர்தலை முறைகேடு இல்லாமல் நடத்த முடியாது. சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடக்கும் என்ற உத்தரவாதத்தை முதலில் அவர் அளிக்கட்டும்" என்றார்.