ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆளுநர் மாளிகை அருகில் உள்ள கட்டடங்களின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் குண்டுத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஆளுநர் மாளிகை அருகில் 20 மீட்டர் தொலைவில் நின்றிருந்த காரிலிருந்து 5 ராக்கெட் குண்டுகள் பாய்ந்ததாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைக்கோலுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டுள்ள இந்த ராக்கெட்டுகள் ரிமோட் மூலம் இயக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், இதற்கு தாலிபான்கள்தான் காரணம் என்றும் ஆஃப்கன் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அண்மையில், காபூலில் தாலிபான்கள் நடத்திய 3 தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.