இந்தியாவுடனான உறவு வலுவாக உள்ளதாக மொரீசியஸ் அதிபர் சர் அனிரூத் ஜுக்னாத் கூறியுள்ளார்.
சொந்த பயணமாக தனது மனைவி சரோஜினியுடன் இந்தியா வந்துள்ள அதிபர் ஜுக்னாத் தற்போது ஹரியானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்னல் என்ற பகுதியில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சியில் பங்கேற்று ஹிந்தி மொழி இசை சி.டி.யை வெளியிட்டார்.
அப்போது, மொரீசியஸ் சுதந்திரம் பெறும் போதிலிருந்தே இந்தியா பல்வேறு உதவிகளை அளித்துவருகிறது. இரு நாடுகளின் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. பல்வேறு பன்னாட்டு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து ஒருமித்த கருத்துடன் செயலாற்றி வருகின்றன என்று அதிபர் ஜுக்னாத் கூறினார்.
கடந்த 1983ம் ஆண்டு இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தந்தில் இந்தியா - மொரீசியஸ் நாடுகள் கையெழுத்திட்டன. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய போதும் ஒப்பந்தத்தை கைவிட இந்தியா மறுப்பு தெரிவித்துவிட்டது.
நிதி சார்ந்த சேவைத்துறை மொரீசியசில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளன.
மொரீசியஸில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள். மார்ச் 12ம் தேதியை தேசிய தினமாக கொண்டாடும் மொரீசியஸின அரசியல், சமூக உரிமை போராட்ட தாக்கத்திற்கு இந்தியாவின் சுதந்திர போராட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளதும் குறிப்படத்தக்கது.