பாகிஸ்தானின் குவட்டா நகர், குச் முரில் உள்ள வாகன சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை குச் முர் வாகன சோதனைச் சாவடியில் தற்கொலை படை பயங்கரவாதிகள் வந்த வாகனத்தை ராணுவத்தினர் சோதனை செய்ய வந்த போது பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அப்பகுதியில் அதிக வாகனங்கள் நின்றுள்ளன. இதனால்தான் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு தற்கொலை படையினர் உட்பட 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 13 ராணுவ வீரர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் வாகித் அர்சத் கூறியுள்ளார்.
இதுவே இந்நகரில் நடத்தப்பட்ட முதல் தற்கொலை படைத்தாக்குதல் என்றும் அர்சத் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள ராணுவ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்கொலை படையினரின் தலைப்பகுதியை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவற்றை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.