ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா குழாய் எரிவாயுத் திட்டத்தின் விதிமுறைகளை இந்தியா ஏற்காவிட்டாலும், ஈரானிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதற்கான பேச்சு தொடர்ந்து நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத் தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும், "பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் பலமடங்கு வளர்ந்துள்ளது. அதற்கேற்ற வகையில் எல்லா துறைகளிலும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, எரிசக்தியை உருவாக்கும் முயற்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படும் நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், எரிவாயு இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதற்காக தற்போதுள்ள திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார் முஷாரஃப்.