மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் நடத்திய பேரணிக்குத் தலைமை தாங்கிய ஹிந்து உரிமைகள் போராட்டக் குழுவின் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள் என்று மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ மூசா ஹூசைன், "ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் மீது சாற்றப்பட்டுள்ள குற்றங்களை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளன. போராட்டத்தில் தொடர்புடைய மற்ற இந்தியர்களும் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள்" என்றார்.
''மலேசியாவின் வரலாற்றில் இன்னொரு கரும்புள்ளி உண்டாவதற்கு வாய்ப்பளிக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கிழைப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் எச்சரித்தார்.
ஏற்கெனவே, சட்டவிரோதமான ஊர்வலங்களில் பங்கேற்கும் வழக்கறிஞர்களின் பதிவு உரிமங்களைப் பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.