பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஊழல் நிறைந்ததாகவும், ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதாகவும் உள்ளது என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குற்றம்சாற்றி உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள முறைகேடான பொதுத் தேர்தலால் பாகிஸ்தான் மட்டுமன்றி எல்லா நாடுகளும் பாதிக்கப்படும். பயங்கரவாதத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும்'' என்றார்.
''பயங்கரவாதத்திற்கு ஊட்டமளித்து வளர்க்கும் அதிபர் முஷாரஃப் தலைமையிலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எதிர்க் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தலை வெளிப்படையாக நடத்துமாறு பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும்'' என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பெனாசிர், '' பட்டியலில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் புதிதாகப் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. போலி என்று அறிவிக்கப்பட்ட 20,000 க்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளன'' என்றார்.
இது போன்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஊழல் மலிந்துள்ளது. முஷாரஃப்பின் தலைமைக்குச் சாதமாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்திடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் பெனாசிர் கூறினார்.