அமெரிக்காவில் உள்ள தேவாலயங்களின் அருகில் நடந்த 2 துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில், துப்பாக்கி ஏந்திய மர்ம ஆள் ஒருவன் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
கொலரோடா மாநிலம் அர்வாடாவில் தேவாலயத்துடன் கூடிய மதப்பயிற்சி மையத்தில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நுழைந்த மர்ம ஆள் ஒருவன், விடியும் வரை தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளான்.
ஆனால், மையத்தில் இருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்த ஆத்திரமடைந்த அந்த ஆள், தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டான்.
இதில், பயிற்சி மையத்தின் ஊழியர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில், அர்வாடாவில் இருந்து 112 கி.மீ. தொலைவில் கொலரோடா ஸ்பிரிங் என்ற இடத்தில் உள்ள புது வாழ்வு தேவாலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம ஆள் ஒருவன், திடீரென்று சரமாரியாகச் சுட்டான். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சத்தம் கேட்டுவந்த தேவாலயத்தின் காவலாளி அதிரடியாகத் திருப்பிச் சுட்டதில், துப்பாக்கி ஏந்திய மர்ம ஆள் கொல்லப்பட்டான்.
இந்நிகழ்வு நடந்த நேரத்தில் தேவாலயத்திற்குள் சுமார் 7,000 பேர் பிரார்த்தனையில் இருந்ததாகவும், காவலாளியின் தாக்குதலால் அனைவரும் உயிர் தப்பினர் என்றும் தேவாலய நிர்வாகம் கூறியுள்ளது.
நிகழ்விடத்தில் இருந்த சாட்சிகள் தெரிவித்த தகவல்களை விசாரித்த பின்பு, இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்தியது ஒரே ஆளாக இருக்கக் கூடும் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வணிக வளாகம் ஒன்றில் நுழைந்த இளைஞன் ஒருவன், திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூடில் 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.