அதிகமான பொருளாதாரச் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய தாக்குதல் திட்டங்களை பயங்கரவாதிகள் கையாளக் கூடும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதம் குறித்து பஃக்ரைனில் நடந்த கூட்டமொன்றில் பேசிய அவர், ஆஃப்கன் -பாகிஸ்தான் எல்லையில் உருவாக்கி வரும் அல் கய்டா இயக்கத்தின் புதிய பயிற்சிப் பள்ளிகள், மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றார்.
இந்திய உளவுத் துறையின் தகவல்களின்படி, அல் கய்டா இயக்கம் தனது பயிற்சிப் பள்ளிகளுக்கு 14 நாடுகளில் இருந்து ஆட்களைச் சேர்ப்பது தெரியவந்துள்ளது என்று கூறிய நாராயணன், பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளின் இலக்கு பொருளாதாரக் கட்டமைப்புகள்தான் என்று குறிப்பிட்டார்.
நிதி பலம், ஆயுத பலம், தகவல் தொடர்பு ஆகிய எல்லா வசதிகளையும் பெற்றுள்ள அல் கய்டா இயக்கத்தினால், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய்க் குழாய்கள், சேமிப்புக் கிடங்குகள், ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் போன்ற பொருளாதாரக் கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
எனவே பயிற்சிப் பள்ளிகளைக் கண்காணித்து அழிக்க சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.