மலேசியாவில் இந்தியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தலையிட வேண்டும் என்று இந்து உரிமைகள் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த பிரச்சனையில் தாங்கள் மேற்கொண்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு உரிய பலன் கிட்டாததால் இந்தியா தலையிட வேண்டும் என்று ஹின்ட்ராஃப்பின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பிரச்சனையில் மலேசிய வாழ் இந்தியர்கள் தங்களது தாயகமான இந்தியாவை அணுகாமல் வேறு எங்கு செல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு பணம் வாங்கித் தருவதாக ஹின்ட்ராஃப் ஆசை காட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அவர், இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ஹின்ட்ராஃப்பை கலைத்து விட தயார் என்றும் கூறினார்.
மலேசியாவில் 31 இந்தியர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், அவர்கள் அனைவரும் பத்துமலை முருகன் கோயிலுக்குள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்ததாகவும், வெளியில் இருந்த போலீசாரை கொலை செய்ய அவர்கள் எப்படி முயற்சித்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.