பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் ஏதேனும் முறைகேடுகள் நடக்குமானால் முஷாரஃப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ எச்சரித்துள்ளார்.
''அவசர நிலையைப் பிரகடனம் செய்ததன் மூலம் தேர்தலில் இருந்து தப்பிக்க ஆளும் கட்சியினர் திட்டமிட்டனர். ஆனால் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வற்புறுத்தியதால் பொதுத் தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
முறைகேடுகள் ஏதாவது நடந்தால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்துவோம். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கோரி ஆளும் கட்சியினரை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும்'' என்று பெனாசிர் கூறினார்.
உச்ச நீதிமன்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பெனாசிர், ''பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளின் பிரச்சனையில் புதிய நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தினால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை''என்றார்.