இலங்கையில் அபிமானபுரம் பகுதியில் பொதுமக்கள் சென்ற பேருந்து கண்ணிவெடியில் சிக்கியதில் 15 பேர் பலியாயினர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர்.
அனுராதபுரத்திலிருந்து ஜனகபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிலங்கா போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்து நேற்று இரவு 8:15 மணிக்கு கண்ணிவெடியில் சிக்கியது. இதில் நிகழ்விடத்திலேயே 15 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் பெண்களாவர். பலியானவர்களின் உடல்கள் கெப்பிட்டிகொல்லாவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த 38 பேரும் கெப்பிட்டிகொல்லாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லும் பணியில் அவசர சிகிச்சை வாகனங்களும், பொதுமக்களின் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால், அபிமானபுரத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதையடுத்து அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.