இலங்கையில் நேற்று நடந்த மோதலில் ராணுவத்தினர் 7 பேரும், விடுதலைப் புலிகள் 42 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
'மன்னார் அருகில் ஆதம்பம் பகுதியில் நடந்த மோதலில் ராணுவத்தினர் 6 பேரும், புலிகள் 35 பேரும் கொல்லப்பட்டனர். மேலும், இருதரப்பிலும் சுமார் 45 பேர் படுகாயமடைந்தனர்.
யாழ்பாணத்தில் முகமலை எல்லையில் நடந்த மோதலில் புலிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதற்கிடையில், யாழ்பாணம் வாதிரி பகுதியில் ராணுவத்தினர் மீது புலிகளின் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த முயன்றனர். இதில் புலிகளில் ஒருவர் பலியானார். ராணுவத்தினர் தப்பினர்.
பலியானவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள, தும்பாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் தரணி என்று தெரியவந்துள்ளது. அவரின் உடலில் இருந்து வெடிக்காத வெடிகுண்டு பெல்ட் ஒன்று கைப்பற்றப்பட்டது.
இந்நிகழ்வு நடந்த இடத்திற்கு அருகில், புலிகள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் ராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டார்' என்று பாதுகாப்புத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.