இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதால், பேச்சின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு சர்வதேச நாடுகள் வற்புறுத்தவேண்டும் என்று இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.
புதுடெல்லியில் நடந்த இந்திய- ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பு மாநாட்டின் முடிவில் இருதரப்பும் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் நடந்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சிறிலங்கா அரசினால் முன்வைக்கப்பட வேண்டிய அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கலாம்.
அதேநேரத்தில், மோதல்களுக்கு ராணுவத் தீர்வு காண்பதற்குச் சாத்தியமில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை பேச்சின் மூலம் காண்பதற்கு சர்வதேச நாடுகள் வற்புறுத்த வேண்டும்.
மோதல்களுக்குக் காரணமான எல்லா தரப்பினரும், மனித உரிமைகளையும் சர்வதேச மனித உரிமை விதிகளையும் மதித்து நடக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்து வரும் மோதல்களை இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த மோதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய -ஐரோப்பிய நாடுகள் 8 ஆவது கூட்டு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வணிகஅமைச்சர் கமல்நாத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் போர்ச்சுக்கல் பிரதமர் ஜோஸ் சொக்ரேட், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜோஸ் மனுவேல் பராசோ, ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் துறை ஆணையர் பீட்டர் மன்டேல்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.