பாதுகாப்புக் காரணங்களின்பேரில் நேற்று ஒரே நாளில் சிறிலங்காதலைநகர் கொழும்பிலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வசிக்கும் 3,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்கா ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொழும்பைச் சுற்றியுள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சித்ரவதை முகாம்களான காலி, பூசா ஆகிய சிறைகள் நிறைந்துவிட்டன. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கழுத்துறை சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
கொழும்பு நகருக்குள் நுழைந்த எல்லா வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. இதனால் கொழும்பிற்கு வரும் முக்கியமான சாலைகளில் பல மைல் தூரத்திற்கு வரிசையாகவாகனங்கள் காத்திருந்தன. குறிப்பாக தமிழர் பகுதிகளிலிருந்து வந்த வாகனங்களில் வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ரகசிய இடங்களுககுக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். பலர் நேரடியாகச் சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கொழும்பின் மேற்குப் பகுதியில் உள்ள பம்பலப்பட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தைப் பகுதிகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு நகருக்கு வெளியே வத்தளை, கெந்தளை, மாபொல, தெகிவளை, கல்கிசை, மட்டக்குளி, முகத்துவாரம், அளுத்மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை, கோட்டை, புறக்கோட்டைப் பகுதிகளிலும் பலத்த தேடுதல்களும், சோதனைகளும் நடத்தப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு உத்தரவின் பேரிலேயே இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடப்பதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். நேற்று மட்டும் 3,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தனர்.