சிறிலங்க விமானப்படை வெடிகுண்டு நிபுணர்களும், காவல் துறையினரும் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டருகில் இன்று பார்சல் வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்ததாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
''மேற்கு சிறிலங்காவில் ஜவத்தா பகுதியில் உள்ள யாழ்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள தொலைபேசிக் கம்பத்தின் கீழ் குறிப்பிட்ட பார்சல் வெடிகுண்டு கிடந்தது. இந்தப் பார்சலைப் பார்த்த பொதுமக்கள் சிலர் உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்'' என்று பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான தமிழர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் சிறிலங்க காவல் துறையினர் கைது செய்துவரும் நிலையில் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறியுள்ள காவல் துறையினர், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற சரியான தகவலைத் தருவதற்கு மறுத்துவிட்டனர்.