''பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை'' என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் கூறுகையில், மற்ற நாடுகளில் உள்ளதைக் காட்டிலும் பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்றார்.
அணு ஆயுதங்கள் மிக நேர்த்தியான பாதுகாப்பு அமைப்பின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை தவறானவர்களின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை.
பாகிஸ்தானில் அணு ஆயுதப் பாதுகாப்பு தொடர்பாக சில நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள் தவறானவை. இதுபோன்ற செய்திகள் பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இழுக்கை ஏற்படுத்துகின்றன. இதனால் இவற்றை அனுமதிக்க முடியாது என்றார் முகமது சாதிக்.
முன்னதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவும், அணு ஆயுதங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.