ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது 30.2 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஐக்கிய ரஷ்ய கட்சி 63.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது என்று ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் விளாடிமிர் செளரவ் தெரிவித்தார்.
மேலும், முதல்கட்ட தகவல்களின்படி கம்யூனிஸ்ட் கட்சி 11.3 விழுக்காடு, தேசியவாத சுதந்திர ஜனநாயகக் கட்சி 9.6 விழுக்காடு, ஜஸ்ட் ரஷ்யா கட்சி 7.2 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.
வேறு எந்தக் கட்சியும் நாடாளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான 7 விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை.
ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இத் தேர்தல் அதிபர் புடினின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கருத்தறியும் தேர்தலாகவும் கருதப்பட்டது.
ரஷ்ய நாடாளுமன்ற துமா அவையில் மொத்தமுள்ள 450 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 11 கட்சிகள் போட்டியிட்டன. கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அவையில் இடம் கிடைக்க வேண்டுமானால் கட்சிகள் குறைந்தபட்சம் 7 விழுக்காடு வாக்குகளையாவது பெற்றாக வேண்டும்.
புடின் கொண்டுவந்த இந்த நடைமுறையை, மிகவும் சிக்கலானது, மக்களாட்சிக்கு விரோதமானது என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 95 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தனது வாக்கைப் பதிவு செய்த அதிபர் புடின், தற்போது கொண்டாட்டமான மனநிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
தனது கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் ரஷ்யா சிதறுண்டு போவதைத் தடுக்க முடியாது என தேர்தல் பிரசாரத்தின்போது புடின் எச்சரித்திருந்தார்.
இந்தத் தேர்தலில் புடின் கட்சி 60 விழுக்காடு வாக்குகளைப் பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன.