"மலேசிய இந்தியர்கள் தொடர்பான பிரச்சினையை எங்கள் நாட்டு சட்டப்படி நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். எங்கள் நாட்டு உள்விவகாரத்தில் வேறு எந்தவொரு நாடும் தலையிடத் தேவையில்லை" என்று மலேசிய அயலுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் கடந்த 25ஆம் தேதி நடத்திய பேரணியில் அந்நாட்டுக் காவல்துறை தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலைத்தது கவலை அளிக்கின்றது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருப்பது குறித்து தி ஸ்டார் எனும் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மலேசிய அயலுறவு அமைச்சர் சையத் ஹமீத் ஆல்பர், "இப்பிரச்சினையில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்திய பிரஜைகளைப் பற்றிப் பேசினால் அவர்களுடைய கவலையை நாங்கள் புரிந்து கொள்வோம். ஆனால் இங்கு நடந்தது மலேசியப் பிரஜைகள் சம்பந்தப்பட்டது. அவர்கள் சட்டத்தை மீறினால் மலேசிய சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உண்டு" என்று கூறியுள்ளார்.
எங்கள் நாட்டில் உள்ள இனங்களைப் பற்றி அயல்நாட்டு அரசுகள் கேள்வி எழுப்பினால் இறுதியில் அது மலேசியா பிளவை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்று கூறியுள்ளார்.