''பாகிஸ்தானில் டிசம்பர் 16 ஆம் தேதி அவசர நிலை ரத்து செய்யப்படும்'' என்று அதிபர் முஷாரஃப் அறிவித்திருக்கிறார்.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட முஷாரஃப், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனவரி மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பு ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அவசர நிலை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்களான பெனாசிர் புட்டோவும், நவாஸ் ஷெரீஃப்பும் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பியிருப்பது நல்ல தருணம் என்ற முஷாரஃப், எல்லா கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பெனாசிர்- முஷாரஃப் சந்திப்பு
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் உள்ளிட்ட சில கட்சிகள் அடங்கிய `அனைத்து கட்சிகள் ஜனநாயக இயக்கம்' என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பெனாசிர் கராச்சியில் இருந்து திடீரென்று இஸ்லாமாபாத் வந்து அதிபர் முஷாரஃப்பை சந்தித்து பேசினார். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து இருப்பது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலர் தாரிக் அஜிஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் உடன் இருந்தனர்.
அமெரிக்கா வரவேற்பு!
பாகிஸ்தானில் அவசர நிலை டிசம்பர் 16 ஆம் தேதி ரத்து செய்யப்படும் என்று அதிபர் முஷாரஃப் அறிவித்துள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் டானா பெர்சன் கூறுகையில், அவசர நிலைக்கு முன்னாள் இருந்தது போன்ற ஊடக சுதந்திரம், பொது இடத்தில் கூடுவதற்கான உரிமை, தங்களின் கருத்துகளைச் சொல்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்களும், வேட்பாளர்களும் சுதந்திரமாக முழுமையாகப் பங்கேற்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
பாகிஸ்தானை முழுமையாக ஜனநாயகத்தின் பாதையில் கொண்டு செல்வதற்கு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். கடந்த 2001 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நிலவிய அரசியல் சூழ்நிலையை மீண்டும் கொண்டுவர அதிபர் முஷாரஃப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டானா பெர்சன் வலியுறுத்தினார்.