மலேசியாவில் தமிழர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி கவலை தெரிவித்து வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளித்துள்ள மலேசிய அரசு, ''அவர், (கருணாநிதி) அவருடைய மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். மலேசியாவில் நடப்பதைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை'' என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் நஸ்ரி ஆஷிஸ், ''இது ஒன்றும் தமிழ்நாடு அல்ல. இது மலேசியா. அவர் அவருடைய மாநிலத்தை பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். அவருடைய மாநிலத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. கருணாநிதியுடன் பேசுவதற்கு இதில் ஒன்றுமில்லை.... இத்துடன் விடுங்கள்'' என்றார்.
முன்னதாக முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 25 ஆம் தேதி இந்தியச் சிறுபான்மையினருக்கு உரிமைகள் கேட்டு ஊர்வலம் நடத்துவதற்காக திரண்டபோது கோலாலம்பூரில் தமிழர்களுக்கு எதிராக மலேசியக் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் தனக்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், மலேசியாவுக்கு வெளியில் உள்ள இந்தியர்கள் அமைப்புகளிடமிருந்து அதிகாரபூர்வமான புகார்கள் எதுவும் இதுவரை வரவில்லை என்று அயலுறவு அமைச்சக நாடாளுமன்றச் செயலர் அகமது ஷாபெரி சீக் கூறியுள்ளார்.