மலேசியாவில் கடந்த வாரம் இந்தியர்களின் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்த ஹிந்து உரிமைகள் குழுவின் தலைவர் வி.கணபதி ராவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது கணபதி ராவைக் காவல்துறையினர் கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் வேலைக்காக ஆங்கில அரசினால் அழைத்து வரப்பட்ட தங்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன் தூதரகத்தில் மனு கொடுப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியர்கள் ஊர்வலம் நடத்த முயன்றதற்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களின் மீது மலேசியக் காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இந்த ஊர்வலத்திற்கு ஹிந்து உரிமைகள் குழு (Hindraf) என்ற அமைப்பைச் சேர்ந்த பி.உதயகுமார், வைத்திய மூர்த்தி, கணபதி ராவ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்கள் மூவரும் ஏற்கனவே, கடந்த வாரம் பொது இடத்தில் அரசிற்கு எதிராகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டனர். ஆனால், புகார்களைத் தமிழில் வழங்குவதற்கு வழக்கறிஞர்கள் தவறிவிட்டதால் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஊர்வலத்தின் அடிப்படையில் கணபதி ராவைக் கைது செய்வதற்கு சிறப்பு அனுமதி கேட்டு மலேசிய அரசு தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊர்வலத்திற்கு காரணமானவர்கள் என்று 88 பேரை மலேசிய அரசு கைது செய்துள்ளது. இவர்களின் மீதான குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.