சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகளையும், கிடங்குகளையும் தாக்கும் திட்டத்துடன் தங்கியிருந்த 208 பயங்கரவாதிகள் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிணறுகளையும், கிடங்குகளையும் தாக்கி அழித்துவிட்டால், உலகப் பொருளாதாரத்தை சீர் குலைத்துவிடலாம் என்ற சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது என்று அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், அயல்நாட்டு பயங்கரவாதி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு உட்பட 208 பயங்கரவாதிகள் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மன்சூர் அல் துர்க்கி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் 32 பேர் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த சில மாதங்களில் எண்ணெய் கிணறுகளைத் தாக்க முயன்ற பல்வேறு பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.
அயல்நாடுகளிலும், சவுதி அரேபியாவிலும் இயங்கும் அல் காய்டா பயங்கரவாதிகள் சிலரும் இவர்களிடம் நிதியுதவி பெற்றுள்ளனர்.
இதுதவிர 18 பேர் கொண்ட குழுவும் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சவுதி அரேபியாவின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 8 ஏவுகணைகளைக் கடத்தியுள்ளனர். ஏவுகணைகளை பயன்படுத்துவதில் வல்லுநரான அயல்நாட்டு நபர் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளான்.