பாகிஸ்தான் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகிய பர்வேஷ் முஷாரஃப் அந்நாட்டு அதிபராக மீண்டும் இன்று முறைப்படி பதவியேற்றார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது டோகர், முஷாரஃப்புக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய முஷாரஃப், ''பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. ஜனநாயகத்தின் பாதையிலிருந்து நீதித்துறை தடம்புரண்டு விட்டது. ஊடகங்களில் உள்ள சில சக்திகள் அமைதியைச் சீர்குலைப்பதற்கு உதவி புரிகின்றன. அதிபர் தேர்தலில் நான் வெற்றிபெற்றது சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நான் பாராட்டுகிறேன்'' என்று கூறினார்.
பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது அவசியமானது என்று அவர் நியாயப்படுத்தினார். அரசியலில் மறுசீரமைப்பு அவசியம் என்பதாலும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முஷாரஃப்.
இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அதிபராகப் பதவியேற்றுள்ள முஷாரஃப் இன்றிரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தை சாராத பொது நபராக அதிபர் பதவியை ஏற்க வேண்டும் என்பதற்காகவே, தளபதி பதவியில் இருந்து முஷாரஃப் விலகியதாக, அவரின் செய்தித் தொடர்பாளர் ரஷித் குரேஷி கூறியுள்ளார்.
இதற்கிடையில், முஷாரஃப் மீண்டும் அதிபர் பதவியை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவசர நிலையை விரைவில் திரும்பப் பெற வலியுறுத்தியும் லாகூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.