பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அந்நாட்டு ராணுவத் தளபதி பதவியிலிருந்து இன்று முறைப்படி விலகினார்.
ராவல்பிண்டியில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் இன்று காலை நடந்த விழாவில் உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் முஷாரஃப். அவருக்கு முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
முஷாரஃப் தனது உரையில், ''ராணுவத்தை எனது குடும்பம் போல நினைத்துச் செயல்பட்டேன். மிகச் சிறந்த ராணுவத்திற்குப் பொறுப்பேற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன். எனது காலத்தில் எனக்குக் கீழ் பணியாற்றிய அதிகாரிகளும், வீரர்களும் எனது கண்முன்னால் பலியானதை நான் கண்டுள்ளேன்.
என்னால் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது ராணுவத்திடமிருந்து நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும், தற்போதுள்ள சூழலில் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.'' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் கியானி, புதிய ராணுவத் தளபதியாகப் பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது 64 வயதாகும் முஷாரஃப், 1964 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். தனது 46 ஆண்டுகள் அனுபவத்தில் 2 பெரிய போர்களைச் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசை ராணுவப் புரட்சியின் மூலம் கலைத்துவிட்டு புதிய ஆட்சியை அமைத்தவர் பர்வேஷ் முஷாரஃப்.
அதன்பிறகு பாகிஸ்தான் அதிபர் பதவியில் அமர்ந்த முஷாரஃப், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தீவிரமாகச் செயல்படுத்துவேன் என்று அறிவித்தார். அவருக்கு அமெரிக்கா நிதியுதவி, ராணுவத் தளவாடங்கள் என ஏராளமான உதவிகளைச் செய்தது.
இதற்கிடையில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் பதவியை முஷாரஃப் முறைப்படி ஏற்றுக்கொள்ள உள்ளார்.