இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சிறிலங்க சமூக நலப் பணிகள் துறை அமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிறிலங்க சமூக நலப் பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சோதித்தபோது குண்டு வெடிப்பு நடந்ததாகவும், இது தற்கொலைத் தாக்குதல் என்றும் சிறிலங்க காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய பெண், ஊனமுற்றவர் என்று குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் ஆளும் கூட்டணி கட்சியான ஈழம் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், இலங்கை சமூக நலப்பணித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பியுள்ளார். இது அவர் மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் என்று அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய டக்ளஸ் தேவானந்தா, கடந்த 2004ஆம் ஆண்டு முதலே தமது உயிருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு குறிவைத்து வருவதாக நேரிடையாக குற்றம்சாற்றியுள்ளார்.
வழக்கமாக புதன்கிழமை தோறும் அமைச்சகம் அமைந்துள்ள இசிபாட்டனா மாவாட்டாவில் மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறைகேட்பது வழக்கம். அந்த அடிப்படையில் இந்த தாக்குதல் சம்பவத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு நடத்தியுள்ளதாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த தற்கொலைப் படை தாக்குதலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் இருந்தார். ஆனால் காவல்ர்கள் அந்த தற்கொலை படை பெண்ணை சோதனை செய்தபோது வெடிக்க செய்ததால் அமைச்சர் உயிர் தப்பினார் என்றார்.
அமைச்சரின் பாதுகாவலர்கள் வழக்கமான சோதனையை மேற்கொண்ட நேரத்தில் அந்த பெண் குண்டை வெடிக்க செய்ததாகவும், இச்சம்பவத்தில் தலைமை காவலர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் என்று அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.