Publish Date: Wed, 28 Nov 2007 (10:59 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (10:59 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான 'புலிகளின் குரல்' வானொலி நிலையத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உள்பட 9 பேர் பலியாயினர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கையில் கிளிநொச்சி நகரிலிருந்து 3.5 கி.மீ. தொலைவில் விடுதலைப் புலிகளின் 'புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பு நிலையம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று மாலை மாவீரர் நாளையொட்டி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையைக் கேட்பதற்காக பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். அப்போது மாலை 4.30 மணிக்கு சிறிலங்கா விமானப் படையின் 2 கிபீர் விமானங்கள் 12 குண்டுகளை வீசியுள்ளன.
இத்தாக்குதலில் வானொலி நிலையப் பணியாளர்கள் 3 பேர் , பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வானொலி நிலைய அறிவிப்பாளர் இசைவிழி செம்பியன், வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம், சுரேஸ்லிம்பியோன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கா.சாந்தபோதினி, அன்பரசி ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு வானொலி நிலையப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பலியான, காயமடைந்த பொதுமக்களின் விவரம் தெரியவில்லை.