இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்துதரான முகமது நபிகள் பெயரை கரடி பொம்மைக்கு வைத்ததால் சூடான் தலைநகர் கார்டோமில் இங்கிலாந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இஸ்லாம் மதச்சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஆசிரியரை சிறையில் சாட்டையால் 40 முறை அடித்துள்ளனர்.
நாற்பத்தி நான்கு வயதான கில்லியான் கிப்சன் சூடான் தலைநகரில் உள்ள யூனிட்டி உயர்நிலைப் பள்ளிக்கு லிவர்பூலில் இருந்து ஆசிரியர் பணிக்காக வந்துள்ளார், அங்கு அவர் 7 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கரடி பொம்மை ஒன்றுக்கு அவர் இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்துதரான முகமது நபிகள் பெயரை வைத்ததாக கூறி காவல் துறையினர் கைது செய்து அவரை அழைத்துச் சென்றதோடு, இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி 40 கசையடிகளையும் கொடுத்துள்ளனர்.
இவ்வழக்கின் சாட்சியாக கிப்சன், முகமது நபிகள் பெயரை வைத்ததாக கூறப்படும் 12 இஞ்ச் உயரத்திலான பிரெவுன் நிற கரடி பொம்மையையும் கைப்பற்றியுள்ளனர்.
கரடி பொம்மைக்கு பெயர் வைத்தது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் கூறாத நிலையில் ஆசிரியர் கிப்சன் காவல் துறையினரால் பள்ளியில் வைத்துக் கைது செய்யப் பட்டதற்கு காரணம் அவருடன் வேலை செய்யும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீது தீவிர பற்றுக் கொண்ட சக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். கிப்சனுக்கு சிறைத் தண்டனையோ, மிக அதிக அளவில் தண்டத்தொகையோ விதிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.
குழந்தைகள் அதிகம் நேசிக்கும் அளவுக்கு அன்பாகவும், பண்பாகவும், இனிமையாகவும் பழகும் தன்மைக் கொண்டவர் ஆசிரியை கிப்சன் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். கிப்சன் தனக்கு என்ன நடந்தாலும் ஒரு போதும் இஸ்லாம் மார்க்கம் குறித்து தவறாக பேசியது இல்லை என்று கூறினர்.
கிப்சனின் குழந்தைகளான ஜெசிகா(27), ஜான்(25) தங்கள் தாய்க்கு நடந்த கொடுமைகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஏதேனும் கருத்து தெரிவித்தால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று கருதுகின்றனர். இதனிடையே இங்கிலாந்து தூதரகம் நடப்பவைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.