தான் பாகிஸ்தானுக்குத் திரும்பும் முயற்சியைத் தடுக்க அதிபர் பர்வேஷ் முஷாரஃப் முயற்சித்தார் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாற்றினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் அதிபர் முஷாரஃப் தடுக்க முயன்றார். இருந்தாலும் நான் நாடு திரும்புவதற்கு அரேபிய அரசர் அப்துல்லா உதவி செய்தார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
'அனைத்துக் கட்சி ஜனநாயக முன்னணியின் கூட்டம் வருகிற 29 ஆம் தேதி நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவிற்கு ஆதரவுபெற முயற்சி எடுக்கப்படும்.
நீதிபதிகள் அரசியலமைப்பின் படியும், சட்டப்படியும் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்' என்றார் நவாஸ் ஷெரீஃப்.
இதற்கிடையில் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இன்னும் இரு நாட்களில் தனது ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகிடுவார் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.