பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப் பிரகடனம் செய்துள்ள அவசர நிலையால் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் அந்நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று யுனஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நியூயார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த யுனெஸ்கோ அமைப்பின் தலைமை இயக்குநர் கோய்ச்சிரோ மட்சூரா, ''பாகிஸ்தானில் ஊடக சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அதிபர் முஷாரஃப் உடனடியாக நீக்க வேண்டும்'' என்றார்.
தணிக்கைகளை எதிர்த்துப் போராடிய 180 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிடுகையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போரானது ஜனநாயகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர அழிக்கக் கூடாது” என்று மட்சூரா கூறினார்.