பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்கள், ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகள் ஆகியவற்றில் பதுங்கியுள்ள தாலிபான்களுக்கு எதிரான போர் பொதுத் தேர்தலுக்குள் முடிந்துவிடும் என்று அந்நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் கான், ஸ்வாத் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் அயல்நாட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்துவரும் போர், ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பு முடிவுக்கு வந்துவிடும் என்று உறுதியளித்தார்.
இதற்கிடையில், ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவத்தினருடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்றும், பொதுத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் எடுத்து வருகின்றன என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.