Publish Date: Mon, 26 Nov 2007 (12:30 IST)
Updated Date: Mon, 26 Nov 2007 (12:30 IST)
பாகிஸ்தானில் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகளில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட தாலிபான்களும் 2 ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
தாலிபான்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மிங்கோரா மலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் மறைந்திருக்கும் தாலிபான்களின் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 35 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர். தாலிபான்கள் நடத்திய பதில் தாக்குதலில் ராணுவத்தினர் 2 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வாகித் அர்சாத் இத்தகவலைத் தெரிவித்தார்.
மிங்கோரா மலைக் கிராமங்களுக்குச் செல்லும் எல்லா வழிகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. அப்பகுதி முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்துவரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். தாலிபான்களுக்கு எதிராக பண்பலை வானொலி ஒன்றைத் தொடங்கவும் ராணுவத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
Webdunia
Publish Date: Mon, 26 Nov 2007 (12:30 IST)
Updated Date: Mon, 26 Nov 2007 (12:30 IST)