பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இன்று கார்களில் வந்த 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
ராவல்பிண்டியில் ராணுவத் தலைமையகத்திற்கு அருகில் காரில் மறைந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, சோதனைச் சாவடி ஒன்றின் மீது தனது காரை மோதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் ராணுவத் தலைமையகத்தின் மற்றொரு புறமுள்ள ஓஜ்ரி முகாமின் அருகில் காரில் மறைந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, ராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது தனது காரை மோதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 14 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த இரண்டு தாக்குதல்களும் அடுத்தடுத்து நடந்ததால் ராணுவத் தலைமையகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் வாகித் அர்சாத் கூறியுள்ளார்.
அண்மைகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடந்துள்ள 3 தாக்குதல்களில் 18 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.