அவசர நிலையை விலக்கிக் கொள்வதற்கு விதிக்கப்பட்ட கெடுவை முஷாரஃப் மீறியதால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
''பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் 10 நாட்களுக்குள் அவசர நிலையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ராணுவத் தளபதி பதவியைவிட்டு விலக வேண்டும் என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனையை அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீறி விட்டார்'' என்று காமன்வெல்த் பொதுச் செயலாளர் டான் மெக்கின்னான் நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
''காமன்வெல்த் நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் குழுவின் கூட்டம் கடந்த 12 ஆம் தேதி நடந்தபோது, பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. இதனால் ஜனநாயகம் திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மேற்கொண்டு வரும் போதிலும், காமன்வெல்த் அடிப்படை மதிப்புகள் மீறப்பட்டுள்ளன.
அவசர நிலை இன்னும் கைவிடப்படவில்லை. நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்டங்கள் இன்னும் முடங்கித்தான் உள்ளன'' என்றார் மெக்கின்னான்.
அடுத்த ஆண்டு காமன்வெல்த் நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் குழு ஒன்று பாகிஸ்தானுக்குச் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் அரசை ராணுவப் புரட்சி மூலம் கலைத்துவிட்டு, ராணுவத் தளபதியாக இருந்த முஷாரஃப் ஆட்சியைப் பிடித்தபோது காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.
பிறகு 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகள் திரும்பியுள்ளன என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் மீண்டும் பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.