''அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தனது ராணுவத் தளபதி பதவியைவிட்டு விலகி, அவசர நிலையையும் கைவிட்டால்தான் பொதுத் தேர்தலை வெளிப்படையாக நடத்த முடியும்'' என்று அமெரிக்கா அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டு வருவது நல்ல நடவடிக்கை என்றாலும், அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தனது ராணுவத் தளபதி பதவியைவிட்டு விலகி, அவசர நிலையையும் கைவிட்டால்தான் பொதுத் தேர்தலை வெளிப்படையாக நடத்த முடியும் என்றார்.
அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் நெக்ரோபாண்டே பாகிஸ்தானுக்கு செல்லவிருப்பது குறித்து கருத்து தெரிவித்த ரைஸ், பொருளாதார வளர்ச்சிக்கும், நாகரிகமடைந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஜனநாயகபூர்வமான நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியமானது என்று பாகிஸ்தானுக்குச் சொல்லியாக வேண்டும் என்றார்.
பாகிஸ்தானின் முக்கியப் பிரச்சனையான தீவிரவாதத்திற்கு எதிராகப் போராட, அந்நாட்டில் உள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் ரைஸ் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசர நிலையை எதிர்த்த எதிர்க்கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் 2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட 3,400 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 2,000 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.