''பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியில் இருந்துகொண்டே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டது செல்லும்'' என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியில் இருந்து கொண்டே அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் வாஜிஹூதீன், மக்தூம் அமின் ஃபாகிம் ஆகியோர் உட்பட பலர் 6 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அப்துல் ஹமீது டோகர் தலைமையிலான முழு அமர்வு விசாரித்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவை விசாரணைக்கு வந்தபோது 5 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இறுதி வழக்கையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து முஷாரஃப் பாகிஸ்தானின் அதிபராக அடுத்த 2 நாட்களுக்குள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு அவர் தனது ராணுவத் தளபதி பதவியை விட்டு விலகிடுவாரா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ராணுவத் தளபதி பதவியில் இருக்கும் முஷாரஃப் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.
முஷாரஃப் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த 3 ஆம் தேதி அவசர நிலையைக் கொண்டு வந்தார். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பல நீதிபதிகளை தனக்கேற்ற வகையில் பதவி விலகச் செய்தார்.
இதைக் கண்டித்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், பாகிஸ்தானில் அவசர நிலை நீக்கப்பட வேண்டும் என்றும், முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதனால், விரைவில் ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகுவதாக முஷாரஃப் அறிவித்துள்ளார். ஆனால், அதிபராக பதவிப் பிரமாணம் எடுப்பதற்கு முன்பு அது நடக்குமா என்று தெரியவில்லை.
அடுத்த ராணுவத் தளபதவியாக முன்னாள் ஐ.எஸ்.ஐ தலைவர் கியானி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.