''பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலை பெனாசீர் புறக்கணிக்க வேண்டும்'' என்று நவாஸ் ஷெரீஃப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப்புக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடத் திட்டமிட்டுள்ளன. அவசர நிலையைக் கைவிடாவிட்டால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கவும் அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கிடையில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசீர் புட்டோ மட்டும் அதிபர் முஷாரஃப்புடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சித்து வந்தார்.
பெனாசீர் தனது முயற்சியை கைவிட்டுவிட்டு தங்களின் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று மற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சவுதியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃப், பெனாசீரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதில் தன்னுடைய நிலைபாட்டை விளக்கினார். அதிபர் முஷாரஃப் சவுதிக்கு வந்தபோது தான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் நவாஸ் ஷெரீஃப் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் நடத்தும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் பெனாசீரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட பெனாசீர் விரும்பாவிட்டாலும், அவரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்களுடன் நவாஸ் ஷெரீஃப் தனியாகப் பேச்சு நடத்தி வருகிறார்.
குறிப்பாக, முக்கியத் தலைவர்களான மக்தூம் அமின் ஃபாகிம், காசி ஹூசைன் அகமது ஆகியோருடன் நவாஸ் பலமுறை பேசியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ரம்ஜானிலிருந்து அதிபர் முஷாரஃப்பைச் சந்திப்பதற்கு 3 முறைக்கு மேல் நவாஸ் ஷெரீஃப் முயற்சித்தார் என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.